லங்கா பிரீமியர் லீக் 2020: உள்ளூர் வீரர்களின் திறமைகளை உணர்ந்து, ஒரு வலுவான விளையாட்டு பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தின் ஆரம்பம்.
லங்கா பிரீமியர் லீக் 2020 நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அது உலக விளையாட்டுத் துறையில் இலங்கையை பலப்படுத்தும் ஒரு போட்டியாகவும் உள்ளதுடன், இப்போட்டியானது இப்போதே உள்ளூர் மற்றும் சர்வதேச விளையாட்டு பார்வையாளர்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாம் அனைவரும் அறிந்தவகையில், உலகின் பிற நாடுகளைப் போலவே, இலங்கையும் கடந்த பல மாதங்களாக உலகளாவிய கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாட்டில் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை அமுல்படுத்தி வருகிறது. நான் இதனை எழுதுகையிலும், இலங்கை பாரிய கொவிட் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறது. மேலும் அதை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படைகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கடுமையாக போராடி வருகின்றனர்.
கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, எல்பிஎல் 2020 போட்டி நவம்பர் மூன்றாம் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வீரர்கள், பார்வையாளர்கள் மற்றும் நாட்டின் நீண்டகால நலனை கருத்திற்கொண்டு விளையாட்டு அமைச்சு, இலங்கை கிரிக்கெட் மற்றும் எல்பிஎல் 2020 அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து எல்பிஎல் 2020 போட்டியை நவம்பர் 21 முதல் டிசம்பர் 13 வரை நடத்துவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளனர்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கையில் இதுபோன்ற ஒரு போட்டியை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து பல ஆண்டுகளாகப் பேசப்பட்ட போதிலும், அந்த பேச்சுவார்த்தைகள் இந்நாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் 20-20 போட்டி அனுபவத்தை பெற்றுக்கொள்வதை காரணமின்றி ஒத்திவைக்கும் ஒரு செயற்பாட்டிலேயே நிறைவடைந்தது. இந்த சவாலான தருணத்திலும் இந்த போட்டியை யதார்த்தமாக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு பல வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி, இந்த செயற்பாட்டை முன்னெடுத்து செல்வதற்கு நடவடிக்கை எடுத்ததற்கு காரணம் இது இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது என்பதாலாகும். குறிப்பாக, இந்த போட்டி நாட்டின் விளையாட்டு பொருளாதாரத்தை கட்டமைத்து, இலங்கையின் இளம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை சர்வதேச அரங்கிற்கு வெளிப்படுத்துவதற்கான களத்தை அமைக்கும் என்று நான் நம்புகிறேன்.
எனது வலைப்பதிவில் இந்த கட்டுரையை வெளியிட்டபோது, கிறிஸ் கெய்ல், அண்ட்ரே ரஸ்ஸல், ஷாஹிட் அஃப்ரிடி, ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் கார்லோஸ் பிராத்வைட் ஆகிய 20-20 கிரிக்கெட் அரங்கை ஆக்கிரமித்துள்ள புகழ்பெற்ற வீரர்கள் பலரும் தங்களது பங்கேற்பை உறுதிபடுத்தியுள்ளமை இவ்வாண்டில் எல்.பி.எல். போட்டியின் வெற்றியை பறைசாற்றியுள்ளது.
சமீபத்திய வாரங்களில் இந்த போட்டி குறித்த சில ஊடகங்களில் விமர்சிக்கப்பட்ட போதிலும், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, இலங்கை கிரிக்கெட் சபையுடன் இணைந்து, போட்டியை சீராக நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இது எமது முதலாவது போட்டி என்பதால் தற்போதுள்ள குறைபாடுகளை சரிசெய்து நாம் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்த குறைபாடுகளை சரிசெய்து நாட்டில் வருடாந்த போட்டியாக எல்.பி.எல் போட்டியை நடத்துவதற்கு நாம் எதிர்பார்க்கிறோம்.
இந்த நேரத்தில் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த வகையான சர்வதேச அளவிலான போட்டியின் மூலம் நாட்டின் விளையாட்டு பொருளாதாரத்தை உயர்த்த முடியும். இது கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக கடந்த சில மாதங்களில் கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக குறைந்து வருகிறது. எல்.பி.எல். போட்டியானது நமது இளம் விளையாட்டு வீரர்களுக்கு அதிக சர்வதேச கவனத்தையும் அங்கீகாரத்தையும் தரும், மேலும் இதுபோன்ற மிகவும் போட்டித்திறன் வாய்ந்த போட்டி, பொழுதுபோக்குகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், விளையாட்டு பொருளாதாரத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். கொரோனா உலகளாவிய தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விளையாட்டு சுற்றுலாத் துறையை வலுப்படுத்தவும், இலங்கையை உலக வரைபடத்தில் விளையாட்டு மூலம் வலுவான நாடாக உயர்த்தவும் இந்த போட்டி ஒரு வலுவான அடித்தளமாக அமையும்.
எல்.பி.எல்.-2020, முதலாவது 20-20 போட்டியை நாட்டின் முதன்மையான வருடாந்த போட்டியாக மாற்றுவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சராக, எனது அமைச்சின் ஊடாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு முழு ஆதரவையும் வழங்க எதிர்பார்க்கிறேன். அதன்மூலம் இப்போட்டியை நாம் இன்னும் வெற்றிகரமாக தொடர முடியும். இலங்கை மற்றும் சர்வதேச வீரர்களுக்கு ஒரு தளத்தை உருவாக்க இதுபோன்ற ஒரு போட்டியின் அனுகூலங்கள் மகத்தானவை.
அதே நேரத்தில், போட்டிகளுக்கு தேவையான அனைத்து நடைமுறைகளும் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், விளையாட்டுத்துறை அமைச்சராக, நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் வீரர்களை தேர்ந்தெடுப்பதில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை பராமரிக்குமாறு இலங்கை கிரிக்கெட் சபைக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். விளையாட்டு அமைச்சராக, சர்வதேச சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி போட்டிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், போட்டி நிர்ணயம் தொடர்பான விதிகளை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவித்துள்ளேன்.
மேலும், அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களும் போட்டிக்கு முன்னும், பின்னும், செயல்படுத்தப்பட வேண்டும்.
எல்.பி.எல். இந்த போட்டிகளை சூரியவெ வ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்து, இறுதிப் போட்டிகளை பல்லேகெல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
எல்.பி.எல் என்பதுவீர வீராங்கனைகளின் மற்றும் நாட்டின் சலனை கருத்திற்கொண்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் செயற்படுத்த தீர்மானித்துள்ள பல சர்வதேச போட்டிகளின் ஆரம்பமாகும். இந்நாட்டின் வீரர்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் சர்வதேச நிகழ்வுகளுக்கான சிறந்த இடமாக இலங்கையை நிறுவுவதற்கான தருணம் இது.
இந்த சிந்தனையின் மூலம் நாம் ஊக்குவிக்கப்பட்டு எமது வீர வீராங்கனைகளுக்காக ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய நேரம் இது. இது அதன் ஆரம்பம்.
அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
Leave a Reply